ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!
Author
Bala
Date Published
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்படுத்து சில வினாடிகளில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் 241 பயணிகள் மற்றும் 38 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி, ஜூன் 18, 2025 காலை 10:45 மணி வரை, 190 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் அவர்களின் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக உறுதிப்படுத்தினார். இதில் 123 பேர் இந்தியர்கள், 27 பேர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகல் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர், மற்றும் 4 பேர் விமானத்தில் பயணிக்காதவர்கள் ஆவர். இதுவரை 157 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விபத்தின் தீவிரத்தால் பெரும்பாலான உடல்கள் எரிந்தோ அல்லது சிதைந்தோ காணப்பட்டதால், டிஎன்ஏ பரிசோதனை மூலமே அடையாளம் காண முடிந்தது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்திநகரில் உள்ள தடயவியல் ஆய்வகம் (FSL) மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NFSU) குழுக்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
இந்த பரிசோதனைகளை துரிதப்படுத்த, மாநில அரசு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். விபத்தில் ஒரே ஒரு பயணி, பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ்குமார் ரமேஷ், அதிசயமாக உயிர் தப்பினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பியுள்ளார். மேலும், முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட பல முக்கிய நபர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரூபானியின் இறுதி சடங்கு ராஜ்கோட்டில் மாநில மரியாதையுடன் நடைபெற்றது.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த நபரின் புதிய அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.