இந்தியா போட்டியை நீங்க பாத்துக்கோங்க…நான் BBL போறேன்! இங்கிலாந்துக்கு பை சொன்ன ஆர்ச்சர்!
Author
Rohini
Date Published
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, இந்த போட்டியில் விளையாட தான் இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இப்படியான சூழலில், இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (பிபிஎல்) 2025-26 சீசனுக்கான டிராஃப்டில் முழு கால அளவுக்கு தன்னை தயார் படுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த டிராஃப்ட் ஜூன் 19, 2025 அன்று நடைபெற உள்ளது. ஆர்ச்சர், கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக பிபிஎல் தொடரில் விளையாடியவர், 34 விக்கெட்டுகளை 23.26 என்ற சராசரியில் வீழ்த்தியவர்.
தற்போது, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது ஏற்பட்ட கட்டைவிரல் காயம் காரணமாக அவர் ஓய்வில் உள்ளார். இருப்பினும், அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த போட்டிக்கு டாடா சொல்லிவிட்டு ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார்.
பிபிஎல் தொடர் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடைபெற உள்ள நிலையில், அதுவரை ஆர்ச்சர் விளையாடுவாரா அல்லது இங்கிலாந்து -இந்தியா டெஸ்ட் தொடரில் முடித்த பிறகு மீண்டும் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏனென்றால், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மட்டும் தான் அவர் தவறவிடுவதாகவும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து தேர்வுக்குழு தலைவர் லூக் ரைட் தெரிவித்துள்ளார். ஆர்ச்சரின் உடற்தகுதியை சோதிக்க, அவர் சசெக்ஸ் அணிக்காக டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார். இது அவரது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முதல்-தர போட்டியாக இருக்கும்.
ஆர்ச்சருடன், இங்கிலாந்து வீரர்களான லியாம் டாசன், ஜேசன் ராய், ஜோர்டான் காக்ஸ், ரீஸ் டோப்லி மற்றும் லூக் வுட் ஆகியோரும் பிபிஎல் டிராஃப்டில் பதிவு செய்துள்ளனர். மேலும், அதே சமயம், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வைத்து ஜூலை 2 முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.