"அவுங்க வருத்தப்படணும்"..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
Author
bala
Date Published

தெஹ்ரான்:ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக பத்வா (மத ஆணை) பிறப்பித்துள்ளார். “இவர்கள் இஸ்லாமிய உலகத்திற்கு எதிரானவர்கள், அவர்களை எதிர்க்க வேண்டும்,” என உலக முஸ்லிம்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நடந்த மோதல்களுக்கு மத்தியில் வந்துள்ளது.
இந்த பத்வா, ஜூன் 2025-ல் நடந்த 12 நாள் போருக்கு பதிலாக வெளியிடப்பட்டது. இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்கள் மற்றும் இராணுவ மையங்களைத் தாக்கியது. பதிலுக்கு, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. அமெரிக்காவும் ஈரானின் மூன்று அணு தளங்களை அழித்தது. டிரம்ப், ஈரான் மீண்டும் அணு ஆயுத முயற்சிகளைத் தொடர்ந்தால் மேலும் தாக்குதல்கள் நடக்கும் என எச்சரித்திருந்தார்.
ஷிராஸி, டிரம்பையும் நெதன்யாகுவையும் “கடவுளுக்கு எதிரானவர்கள்” என அழைத்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முஸ்லிம்களைத் தூண்டினார். ஈரான் சட்டப்படி, இத்தகையவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படலாம். “இவர்களை வருந்தச் செய்யுங்கள், இதற்காக போராடுபவர்கள் புனிதர்களாகக் கருதப்படுவர்,” என அவர் கூறினார்.
இந்த பத்வா, பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக பிரிட்டிஷ்-ஈரானிய வர்ணனையாளர் நியாக் கோர்பானி விமர்சித்தார். இதற்கு முன், 1989-ல் சல்மான் ருஷ்யிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பத்வாவும் இதேபோல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புதிய பத்வா, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பத்வா என்றால் என்ன?பத்வா என்பது இஸ்லாமிய மதச் சட்டமான ஷரீஅவின் அடிப்படையில், ஒரு முப்தி (மத அறிஞர்) வழங்கும் முறையான மதக் கருத்து அல்லது தீர்ப்பு ஆகும், இது முஸ்லிம்களுக்கு தினசரி வாழ்க்கை, நெறிமுறைகள், அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களில் வழிகாட்டுதலாகப் பயன்படுகிறது.