Payload Logo
தமிழ்நாடு

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

Author

bala

Date Published

Madurai branch barrage of questions

சிவகங்கை :மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர், 2025 ஜூன் 27 அன்று நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து (Suo Motu) விசாரணை நடத்தக் கோரி முறையீடு செய்து, காவல்துறை மற்றும் அரசு தரப்புக்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் ஏற்கனவே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அஜித்குமார், மதுரையைச் சேர்ந்த சிவகாமி (73) என்ற பக்தரின் குடும்பத்தினர் கோயிலுக்கு வந்தபோது, அவர்களுக்கு வீல்சேர் வழங்கி உதவினார். குடும்பத்தினர் தங்கள் காரைப் பார்க்கிங் செய்ய அஜித்திடம் சாவி கொடுத்தனர். ஆனால், அவர் கார் ஓட்டத் தெரியாததால், மற்றொருவரை அழைத்து காரை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், காரில் 10 பவுன் நகை காணாமல் போனதாக சிவகாமி திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அஜித்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது அஜித் மயங்கி விழுந்ததாகவும், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை, இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கடும் கேள்விகளை எழுப்பியது. “விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை காவல்துறை தாக்கியது ஏன்? ஒரு சாதாரண நகை திருட்டு வழக்கில் கைதான நபரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் அவரைத் தாக்கியது ஏன்? உயிரிழந்தவர் தீவிரவாதியா? அவரைத் தூக்கிச் சென்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாரா?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அஜித்தின் உறவினர்கள், காவலர்கள் அவரை கடுமையாகத் தாக்கியதால் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கையில் கடைகள் அடைப்பு செய்யப்பட்டு, பதற்றமான சூழல் நிலவியது. நீதிமன்றம் மேலும், “கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்கள் என்ன?” என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.

மேலும், நீதிமன்றம், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும், குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு அறிக்கை முடிவுகள் வந்தவுடன், ஆறு காவலர்கள் மீது மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.