இனிமே UPI பரிவர்த்தனை மின்னல் வேகத்தில் இருக்கும்! NPCI அறிவிப்பு!
Author
Rohini
Date Published
டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக வேகமாக இருக்கப் போகிறது. ஏனென்றால், National Payments Corporation of India (NPCI), கடந்த ஏப்ரல் 26 – ஆம் தேதி அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவென்றால், போன்பே, கூகிள் பே, பேடிஎம் போன்ற பிரபல UPI ஆப்களில் பணப் பரிமாற்றம் இன்னும் வேகமாகவும், எளிதாக மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, ஜூன் 16 முதல், பணத்தை அனுப்புவதும் பெறுவதும் இன்னும் வேகமாக மாறும் என NPCI அறிவித்துள்ளது. இந்த வேகத்திற்கு முக்கியமான காரணமே NPCI, UPI-யின் தொழில்நுட்ப அமைப்பில் பல மேம்பாடுகளைச் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் பணம் அனுப்பும் வங்கிகள் (ரெமிட்டர் வங்கிகள்), பணம் பெறும் வங்கிகள் (பெனிஃபிஷியரி வங்கிகள்), மற்றும் UPI ஆப்களுக்கு இடையேயான இணைப்பை மேலும் சீராக்குகிறது.
NPCI-யின் அறிவிப்பில், “இந்த மாற்றங்கள் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காகவே செய்யப்பட்டுள்ளன. வங்கிகளும் ஆப்களும் தங்கள் அமைப்பில் இந்த மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும், மேலும் வணிகர்கள் அல்லது பார்ட்னர்களிடம் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், அதையும் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பரிவர்த்தனைகள் தாமதமின்றி உடனடியாக நடைபெறும்.
அதைப்போலவே, UPI ஆப்கள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு பேலன்ஸை ஒரு நாளைக்கு 50 முறை வரை சரிபார்க்கலாம். இது உங்களுக்கு உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை எப்போது வேண்டுமானாலும் எளிதாகத் தெரிந்துகொள்ள உதவும். மேலும், “List Account” என்ற புதிய வசதி மூலம், உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள எல்லா வங்கிக் கணக்குகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இந்த வசதியையும் நீங்கள் ஒரு UPI ஆப்பில் ஒரு நாளைக்கு 50 முறை பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும்.
அதே போலவே, ஆட்டோபே (தானாக பணம் செலுத்தும் வசதி) அமைப்பிலும் சில புதிய விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள. அது என்னவென்றால், ஒரு ஆட்டோபே கட்டளைக்கு ஒரு முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும், அதற்கு மூன்று மறுமுயற்சிகள் (ரீட்ரை) வரை அனுமதிக்கப்படும். ஆனால், இந்த முயற்சிகள் UPI சிஸ்டம் பிஸியாக இருக்கும் நேரங்களில் நடக்காது. பிஸி நேரங்கள் என்பது காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இந்த விதிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.