Payload Logo
தமிழ்நாடு

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு! சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட என்னென்ன பாதுகாப்பு வசதிகள்? 

Author

manikandan

Date Published

TVK leader Vijay

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் அதில் ஓராண்டை கடந்துவிட்டார். தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதுவரை மாநாடு, புத்தக வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் முன்னதாக பரந்தூர் பகுதியில் நேரடியாக மக்களை சந்திக்கவும் செய்தார்.

விஜய் அரசியல் கட்சித் தலைவர் மட்டுமல்லாது திரையுலகில் உச்ச நட்சத்திரம் என்பதால் அவரை காண தவெக தொண்டர்கள் தவிர்த்து பொதுமக்களும் அதிக அளவில் கூடி விடுகின்றனர். இதனால் கூட்டத்தை தவிர்த்து வந்த விஜய் , தனது அரசியல் பயணத்திற்காக அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் சார்பில் கூறப்பட்டு வருகிறது.  இதனால் விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெளியான தகவலின்படி, தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த Y பிரிவு பாதுகாப்பின்படி 4 ஆயுதம் ஏந்திய காவலர்கள் உட்பட 8 முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த Y பிரிவு பாதுகாப்பு குழுவில் 2 முதல் 4 சிஆர்பிஎப் வீரர்களும் (மத்திய பாதுகாப்பு படை- CRPF) மற்றவர்கள் மாநில பாதுகாப்பு காவலர்களும் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் விஜய் எங்கு செல்ல உள்ளார், அவருக்கு அங்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள் உள்ளன, என்பதை ஆய்வு செய்து 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.  இந்த பாதுகாப்பு தமிழ்நாட்டிற்க்குள் மட்டுமே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Y பிரிவு பாதுகாப்பு ஏன்?

Y பிரிவு பாதுகாப்பு என்பது மக்கள் மத்தியில் பிரபலமான அரசியல் கட்சி தலைவருக்கோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு மிரட்டல்களை எதிர்கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்களுக்கோ அல்லது சமூக விரோத கும்பலிடம் இருந்து மிரட்டல் பெற்ற நபர்களுக்கோ மத்திய உள்துறை சார்பில் வழங்கப்படும் பாதுகாப்பு அமைப்பாகும்.

இது தனி நபர் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ பாதுகாப்பு கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பிப்பார்கள். அதனை அடுத்து, மத்திய குழு நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து முடிவு செய்யும். அதன் பிறகு பாதுகாப்பு கள நிலவரங்களை ஆய்வு செய்த பிறகு அந்தந்த இடங்களில் பாதுகாவலர்களின் எண்ணிக்கை விவரங்கள் இறுதி செய்யப்படும்.