ஒரே மேடையில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா.. முதல் கையெழுத்தாக #GetOut...
Author
manikandan
Date Published

காஞ்சிபுரம் :விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு துவங்கியுள்ளது. இதனை குறிப்பிடும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவுக்கு தேசிய அளவில் அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வருகை புரிந்துள்ளார். ஒரே மேடையில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அதன் பிறகு விழா தொடங்கியது.
இதில் முதல் நிகழ்வாக , தற்போது தமிழக அரசியலில் பிரபலமாக இருக்கும் GetOut எனும் வார்த்தையை முன்னிறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக GetOut எனும் கையெழுத்து இயக்கத்தை கட்சித் தலைவர் விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அடுத்து ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் விஜய் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார் என்றும் 2026 தேர்தல் குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை கட்சி நிர்வாகிகளிடம் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து தவெக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழாவில் 'கண்டா வரச்சொல்லுங்க' பாடலை பாடியிருந்த கிடாக்குழி மாரியம்மாள் விஜயை புகழந்து பாடினார். இவ்விழாவினை தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் செய்த நலத்திட்ட உதவிகள் பற்றிய குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது.