திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!
Author
bala
Date Published

சென்னை :திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை மர்ம நபர் தூக்கிச் சென்று அருகிலுள்ள மாந்தோப்பில் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சந்தேக நபரை சிறுமி அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, ஆரம்பாக்கம் காவல்துறையினர் அவரை சூளூர்பேட்டை அருகே கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியை கைது செய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் தீவிர விசாரணை நடைபெற்றது. காவல்துறை, குற்றவாளியை அடையாளம் காண உதவும் தகவல்களுக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தது. சிறுமியை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமக, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். காவல்துறைமெத்தனப்போக்காக செயல்படுவதாக கூறி கண்டித்து, சிறுமியின் உறவினர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தற்போது, கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடம் தீவீரமான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் காவல்துறை தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக விமர்சித்தார். காவல்துறை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தகவல்கள் விசாரணைக்கு பிறகு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.