யார் அந்த சார்? "நேர்மையான விசாரணை தேவை" திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
Author
manikandan
Date Published

சென்னை :அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என்ற கேள்வி தற்போது அதிக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் பெயர் கொண்ட எப்ஐஆர் இணையத்தில் லீக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அந்த எப்ஐஆரில் தான் 'சார்' பற்றி குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடக்கின்றன. இதனை தடுத்து பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பலமுறை தெரிவித்துளோம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட இச்சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்து வருகிறது. கல்லூரிகளில், விடுதிகளில் தங்கி பயின்று வேலை செய்து வரும் பெண்களுக்கு பாதுகாப்பை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இச்சம்பவத்தில் அவர் மட்டும் தான் குற்றவாளியா? இந்த குற்றத்திற்கு பின்னால் யாரோ இருக்கின்றனர் என்ற சந்தேகம் வலுக்கிறது. தமிழக அரசு, காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு உடனடியாக பிணை வழங்க கூடாது. சிறையில் இருந்தவாரே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
இச்சம்பவம் குறித்து போராட்டம் நடத்தும் அனைவருக்கும் போராட அனுமதி மறுக்கப்படவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என சிலர் உள்நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர். போராட அனுமதி கேட்பவர்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்." என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.