Payload Logo
தமிழ்நாடு

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! - அமைச்சர் சிவசங்கர்

Author

bala

Date Published

rn ravi sivasankar

சென்னை :இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார்.

அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதாகவும், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக மாளிகை தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் ஆளுநர் வெளியேறியது குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் " இன்று தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் என்பது தமிழக சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் இருந்தது. தமிழகத்தில் வழக்கமாக எப்படி சட்டப்பேரவை நடக்குமோ அதைப்போல தான் இந்த முறையும் நடந்தது.

ஆனால், ஆளுநர் திடீரென வெளியேறி அதற்கு ஒரு காரணத்தை கூறி சட்டப்பேரவையில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்கிறார். ஆளுநர் உரையை வாசித்தால் திமுக சாதனைகளை அடுக்கடுக்காக சொல்லவேண்டியிருக்கும் என்பதால் தான் அவர் இன்று அப்படி நடந்து கொண்டார். ஆட்சியின் சாதனையில் மொத்தமாக 52 பக்கங்கள் ஆளுநர் உரையில் உள்ளது.

எனவே, அதனை படிப்பதற்கு தங்கிக்கொண்டு தான் இன்று ஆளுநர் இந்த மாதிரியான நாடகம் ஒன்றை நடத்தியிருக்கிறார். இதைப்போலவே கடந்த முறை தமிழகத்தில் உள்ள தலைவர்களின் பெயரை சொல்லாமல் மறைத்தவர் இன்று முழுவதுமாக புறக்கணித்து சென்றிருக்கிறார். அதற்கு அவர் தேசிய கீதம் ஒளிக்காதது தான் காரணம் என்று சொல்கிறார்.  தேச பக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததுபோல, தேசிய கீதம் பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளார். தேசபக்தியில் அவர் தமிழ்நாட்டு மக்களை மிஞ்சிய பெரிய ஆள் கிடையாது.

தேசத்திற்காக அற்பணித்த தலைவர்கள் பல தமிழ்நாட்டில் உள்ளனர். இவருக்கு முன்பு ஆளுநர்கள் சிலர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். பாஜகவினரும் தமிழ்தாய் வாழ்த்து பாடி முடிக்கும் வரை எழுந்து நின்றனர். தேசிய கீதத்திற்கு எந்த வகையில் தமிழ்நாடு அவை பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

உரை முடிவில் கூட வாழ்க பாரதநாடு என்று தான் முடித்துள்ளோம்.. எங்களுக்கு தேசபக்தியை சொல்லித் தரவேண்டாம். கண்டிப்பாக சட்டப்பேரவையை அவமதிப்பு செய்ததற்காக ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.  திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது. இரண்டு முறை அவர் தான் தேசிய கீதத்தை அவமதித்தவர். அவர் தான் அவர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனவும் சிவசங்கர் காட்டத்துடன் தெரிவித்தார்.