Payload Logo
தமிழ்நாடு

"லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது"...திருமாவளவன் வேதனை!

Author

bala

Date Published

thol thirumavalavan

சென்னை :சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனத்தையும், இதுபோன்ற மரணங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர். இன்னும் பலரும் இதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இதுவரை இது குறித்து பேசாமல் இருந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது "லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது" என வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் " எந்தக் காரணத்தைக் கொண்டு லாக்கப் மரணங்கள் நிகழக்கூடாது.

இதை அடுத்தடுத்த சம்பவங்களின் போது சுட்டிக்காட்டி வருகிறோம், ஆனால் இது தொடர்கதையாக நீடிப்பது கவலை அளிக்கிறது,” என அவர் தெரிவித்தார். மேலும், இத்தகைய சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இவை மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அது மட்டுமின்றி, காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள், விசாரணை முறைகளில் வெளிப்படைத் தன்மை, மனித உரிமைகள் குறித்த பயிற்சி ஆகியவை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்த அநீதிக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்து, சமூக நீதிக்காக குரல் கொடுப்போம்" எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.