ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்... தவெக தலைவர் விஜய் பதிவு!
Author
manikandan
Date Published

சென்னை :இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடன் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழக அரசு தொடர்ந்து அவமதிக்கிறது என ஆளுநர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதே போல, தமிழக அரசு சார்பில் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுவது மரபு என்றும், சட்டப்பேரவை முடியும் போது தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அரசின் உரையை வாசிக்க மறுத்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியில் சென்றார் என்றும் கூறப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் ஆளுநரின் செயலுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் தனது ஆளுநர் செயலுக்கு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். அதில், " தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்த விவாதங்களே சட்டப்பேரவையில் இடம் பெற வேண்டும். "என ஆளுநர் செயல் குறித்து கருத்து தெரிவித்த விஜய் , சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலை குறித்தும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற நேரலை குறித்து பதிவிடுகையில், " ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." என சட்டமன்ற கூட்டத்தொடரை நேரலையில் காண்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் தவெக தலைவர் விஜய்.
unknown node