வாட்ஸ் அப் சேனலில் அறிமுகமாகும் Subscription முறை? மெட்டா போட்ட பக்கா பிளான்!
Author
Rohini
Date Published
டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள “சேனல்கள்” (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா முறையை (Subscription) கொண்டு வர திட்டமிடுகிறது. இதன்படி, பயனர்கள் தங்களுக்கு பிடித்த சேனல்களில் இருந்து சிறப்பு தகவல்கள், புதிய அறிவிப்புகள் அல்லது பிரத்யேகமான விஷயங்களைப் பார்க்க வேண்டுமென்றால், ஒரு சிறிய மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த மாற்றம் வாட்ஸ் அப்பின் “அப்டேட்ஸ்” (Updates) என்ற பகுதியில் வரவிருக்கிறது. இந்தப் பகுதியில், பயனர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள், செய்தி நிறுவனங்கள், விளையாட்டு அணிகள் அல்லது வணிக நிறுவனங்களின் சேனல்களைப் பின்தொடரலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு செய்தி சேனலை நீங்கள் பின்தொடர்கிறீர்கள் என்றால், அந்த சேனலில் இலவசமாக சில அடிப்படை செய்திகள் வரலாம். ஆனால், முக்கியமான செய்திகளின் விரிவான விளக்கங்கள், பிரத்யேக வீடியோக்கள் அல்லது நேரலை நிகழ்ச்சிகளைப் பார்க்க, நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சேனலை நிர்வாகம் செய்பவர்கள், இந்த சிறப்பு உள்ளடக்கங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யலாம். மெட்டா நிறுவனம் ஆரம்பத்தில் இந்தக் கட்டணத்தில் இருந்து எதுவும் எடுக்காது, ஆனால் பின்னர் 10% பங்கை எடுக்கலாம். இதனால், சேனல் நடத்துபவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இந்த புதிய சந்தா முறை அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் அமலாகும். குறிப்பாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் வாட்ஸ் அப் மிகவும் பிரபலமாக இருப்பதால், இந்த மாற்றம் பயனர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பயனர்கள் தங்களுக்கு பிடித்த சேனல்களில் இருந்து முக்கியமான தகவல்களை எளிதாகப் பெற முடியும், ஆனால் அதற்கு ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.