Payload Logo
தமிழ்நாடு

மாணவி பாலியல் விவகாரம் : "நான் ஏன் போராட வேண்டும்?" கனிமொழி எம்.பி கேள்வி!

Author

manikandan

Date Published

DMK MP Kanimozhi speak about Anna University Sexual harassment case

சென்னை :அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பாஜக சார்பில் குஷ்பூ உள்ளிட்டோர் மதுரையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது அவர்களை ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் அடைத்து வைத்ததாக குற்றசாட்டும் எழுந்தது.

பாலியல் சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூ, திமுக எம்பி கனிமொழி ஏன் இது பற்றி பேசவில்லை. திமுக மகளிரணி என்ன செய்து கொண்டிருக்கிறது என்றெல்லாம் விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்கள் குறித்தும் மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வு குறித்தும் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்ட பிறகு , நடவடிக்கை எடுத்து குற்றவாளி கைதான பின், நான் ஏன் போராட வேண்டும்? நீதிமன்றம் நியாயமாக தீர்ப்பு வழங்க வேண்டும், நியாமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை தான் கண்காணிக்க வேண்டும்."என்று பதில் அளித்தார் திமுக எம்பி  கனிமொழி.

யார் அந்த சார் என எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் கேள்வி எழுப்பி வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, " அதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையும் அப்போது குற்றவாளி போன் ஏரோபிளேன் மூடில் (Flight mode) இருந்ததாக கூறுகிறார்கள். காவல்துறை விசாரணையில் உண்மை வெளிப்படும். இல்லையென்றால் அப்படி ஒரு நபர் இல்லை என்றும் கூட தெரிய வரலாம்." என பேசினார்.

மேலும், " வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போது, குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும் எதிர்க்கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருவது என்பது, இந்த பிரச்சனையை அவர்கள் அரசியலாக்க பார்க்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். பாஜக தலைவர்கள் சிலரே அந்த எப்ஐஆர் நகல்களை இணையத்தில் வெளியிட்டார்கள். அதற்கு காரணம் தமிழக அரசு இல்லை. மத்திய அரசு உருவாக்கிய சாப்ட்வேர் தான் என அவர்களே ஒப்புக்கொண்டனர். " என பாலியல் விவகாரம், எப்ஐஆர் லீக் செய்யப்பட்ட விவகாரம் என பல்வேறு கேள்விகளுக்கு திமுக எம்பி கனிமொழி பதில் அளித்தார்.