Payload Logo
தமிழ்நாடு

வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

Author

bala

Date Published

anbumani sekar babu

சென்னை :பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் பேசியிருந்த அவர் "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என முதலமைச்சர் சொல்வது கோழைத்தனம் தான். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு தான் கோழைத்தனமாக செயல்படுகிறது" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் அன்புமணி ராமதாஸ் பேச்சு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.  அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு " எது கோழைத்தனம்? வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம். மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர் எங்களுடைய முதல்வர் ஸ்டாலின்.

என்னை பொறுத்தவரை, எங்களை கோழை எனக் கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் என்று தான் சொல்வோம். மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் எங்கள் முதல்வர் இரும்பு முதல்வர்" என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து இந்த பேச்சுக்கும் அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் " வழக்கிற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இருக்கு? மற்ற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையா? இருந்தும் கணக்கெடுப்பு இல்லாததற்கு பெயர் கோழைத்தனம் தான். நான் திரும்பவும் சொல்கிறேன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என முதலமைச்சர் சொல்வது கோழைத்தனம் தான்" எனவும் அழுத்தமாக தன்னுடைய கருத்தை அன்புமணி பதிவு செய்தார்.