Payload Logo
தமிழ்நாடு

அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!

Author

bala

Date Published

jeyakumar senthil balaji

சென்னை :மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும் என பேசியது  சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, த.வெ.க தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்   உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். இருப்பினும், இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிசாமி இது பற்றி ஏன் பேசாம இருக்கிறார் என கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதனையடுத்து, அதற்கு விளக்கம் அளித்தத்தோடு மத்திய கல்வி அமைச்சர் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது " மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் "அஞ்சு கட்சி அமாவாசை" பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய எடப்பாடியார்.இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும்; அதற்கான மிக வலுவான குரல் எங்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் குரலாகத் தான் இருக்கும்!

இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அதிமுக தான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்"! தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட "ஸ்டாலின் மாடல்" மட்டுமே!

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது! இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்! கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" எனக்கூறியுள்ளார்.

unknown node