Payload Logo
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் போராட்டங்கள் மறுக்கப்படுகிறதா? கே.பாலகிருஷ்ணின் விமர்சனமும்.. சேகர்பாபுவின் விளக்கமும்...

Author

manikandan

Date Published

CPM State Chief Secretary K Balakrishan - TN Minister Sekarbabu

சென்னை :மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 24வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் என பலர் கலந்து  கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக பற்றி அவர் கூறிய, ' கருகிய தாமரையை அண்ணாமலை அல்ல, அவர் நம்பும் ஆண்டவனே நினைத்தாலும் தமிழ்நாட்டில் மலர வைக்க முடியாது' என்ற விமர்சனம் வழக்கமான விமர்சனம் என கடந்து சென்றாலும், தங்கள் கூட்டணியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுகவை அவர் விமர்சனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாளாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், போராட்டம் நடத்தினால் காவல்துறை வழக்குப்பதிவு செய்வதாகவும் சரமாரியான குற்றசாட்டை கே.பாலகிருஷ்ணன் நேரடியாகவே முன்வைத்தார். அவர் கூறுகையில், " சாதாரணமாக பட்டா கேட்டு கூட்டம் கூட்டினால் கூட காவல்துறை வழக்கு போடுகிறது. தெருமுனை கூட்டம் என்றால் கூட காவல்துறை வழக்கு போடுகிறது. " என்று குற்றம் சாட்டினார் .

மேலும், " ஆர்ப்பாட்டம், போராட்டம்,  ஊர்வலம் என்றாலே காவல்துறை வழக்குபோடுகிறது. நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கேட்கிறேன், 'தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை (எமெர்ஜென்சி) பிரகடனப்படுத்திவிட்டீர்களா என்ன?' எப்படி இந்த காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது? தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்தக்கூடாதா? மக்கள் இயக்கம் நடத்த கூடாதா? பாதிக்கப்படுகிற மனிதன் தனது உரிமைக்காக போராட கூடாதா? " என விமர்சனம் செய்தார்.

" ஆர்ப்பாட்டம் நடத்த முன்வந்தால், அதற்கு அனுமதி மறுத்து கைது செய்தால் பிரச்சனையை முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?"என்று திமுக அரசை நேரடியாக விமர்சனம் செய்தார் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைச்சர் சேகர்பாபு, " எந்த கண்ணோட்டத்தில் அவர் இதனை கூறினார் என தெரியவில்லை. இது ஜனநாயக நாடு. கடந்த ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால், திமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கான போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி என்பது கடந்த ஆட்சி காலம். இதுவரை போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை கூட கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்ததில்லை.  அவர்கள் (சிபிஎம்) தேவை என்னவென்று தெரியவில்லை. விரைவில் கேட்டு அறிந்துகொண்டு அதனையும் நிவர்த்தி செய்வோம்." என கே.பாலகிருஷ்ணன் முன்வைத்த விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு பதில்அளித்துள்ளார்.