அல்-நசீர் அணிக்காக இன்னும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் இவ்வளவா?
Author
Bala
Date Published
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து க்ளப்பில் மேலும் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், அவர் அல் நாசரை விட்டு வெளியேறுவது குறித்த பல மாதங்களாக இருந்த ஊகங்களும் முடிவுக்கு வந்துள்ளன.
அல் நாசருடன் ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம், அவர் 2027 வரை சவுதி அரேபிய கிளப்பில் இருப்பார். இதனால், போர்ச்சுகலின் சிறந்த வீரரான ரொனால்டோ இப்போது குறைந்தது 42 ஆண்டுகள் வரை விளையாட முடியும், இது அவரது சாதனை வாழ்க்கையை நீட்டிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
இதற்கான மொத்த ஊதியமாக ரூ.5000 கோடிக்கு மேல் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக அவர் கிளப்பை விட்டு வெளியேறுவது குறித்து ஊகங்கள் எழுந்தன, ஆனால் அவரது அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது குறித்து ரொனால்டோ தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. அதே ஆர்வம், அதே கனவு. ஒன்றாக வரலாற்றை உருவாக்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அடுத்தாண்டு FIFA கால்பந்து உலக கோப்பையிலும் ரொனால்டோ பங்கேற்பது இந்த அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. ஐந்து முறை பாலன் டி’ஓர் (Ballon d’Or) வென்ற ரொனால்டோ 2022 இல் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபிய கிளப்பில் சேர்ந்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பளம்
சன் ஸ்போர்ட், இந்த ஒப்பந்தத்தின் படி ரொனால்டோவின் சம்பளத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொனால்டோ ஒவ்வொரு ஆண்டும் அல் நாசரிடமிருந்து 178 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 2092 கோடி) சம்பளமாகப் பெறுவார். இது தவிர, அவர் 24.5 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 288 கோடி) ஒப்பந்த போனஸையும் பெறுகிறார்.
இது அவரது ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டைத் தொடங்கும்போது 38 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 446 கோடி) ஆக அதிகரிக்கும். இது தவிர, தங்க காலணி வென்றதற்காக ரொனால்டோவுக்கு 4 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 47 கோடி) போனஸும், அல் நாசர் பட்டத்தை வென்றால் 8 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 94 கோடி) போனஸும் கிடைக்கும்.
தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கு 4 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 47 கோடி) மற்றும் சவுதி நிறுவனங்களுடன் 60 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 705 கோடி) வரை அடையக்கூடிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் வாக்குறுதியும் உள்ளது.