Payload Logo
தமிழ்நாடு

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Author

Bala

Date Published

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவை பின்பற்றத் தவறினால், ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல் பிரிவு அமர்வு, தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

2014 ஆகஸ்ட் 1 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து, தெளிவான உத்தரவுகளுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு இணங்க, 2015 செப்டம்பர் 21 அன்று, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஒரு அரசாணை (G.O.) வெளியிட்டது. இதில், மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஒப்புகை அளிக்க வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குள் மனுக்களை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

மேலும், 2018 ஜூன் 11 அன்று, தமிழ்நாடு அரசு அலுவலக கையேட்டில் திருத்தம் செய்து, மனுக்களை ஒரு மாதத்தில் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது.ஆனால், இந்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், நீர்வழிகள் தவறாக பயன்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல், பொது நல வழக்குகள் (PIL) உயர்நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. சுப்ரமணியம், ஆகஸ்ட் 19 மற்றும் 21 தேதிகளில் அளித்த மனுக்களை ஆட்சியர் மற்றும் ஆர்.கே. பேட்டை தாசில்தார் ஆகியோர் பரிசீலிக்காததால், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல் அமர்வுக்கு மாற்றி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.