Payload Logo
தமிழ்நாடு

"திமுக அரசு மீது நம்பிக்கை இல்லை" பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! 

Author

manikandan

Date Published

TN CM MK Stalin - BJP leader Tamilisai Soundharajan

சென்னை :இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தராஜன், " பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் தற்போது தமிழகத்தில் நடக்கும் திராவிட அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என தீர்மானம் மேற்கொண்டுள்ளோம்." என கூறினார்.

இதனை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், " இன்று சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

முதலமைச்சர் பேசுகையில், அவர்களுடைய அமைச்சர்கள் கூறியதை பொய்யாக்கும் வண்ணம், பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் எங்கள் கட்சி அனுதாபி தான் என பேசினார். தற்போது நடந்த பாலியல் வழக்கு குறித்து பேசுவதை காட்டிலும் கடந்த ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பற்றி நிறைய பேசினார். தற்போதுள்ள ஆட்சி நிலை பற்றி அதிகம் கூறாமல், கடந்தகால ஆட்சி பற்றி தான் நிறைய பேசினார்.

பாலியல் சம்பவத்திற்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி பிரச்சனைக்கும் தொடர்பு ஏற்படுத்தி ஆளுநர் தான் இதற்கு பொறுப்பேற்ற வேண்டும் என்பது போல பேசுகிறார்கள். அப்படி என்றால் தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் சம்பவங்களுக்கு முதலமைச்சர் தானே பொறுப்பேற்க வேண்டும். சட்டசபையில் முதலமைச்சர் சம்பந்தமில்லாத பதிலை பற்றி பேசுகிறார்கள்.  இதனால் தான் இந்த பாலியல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்." என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.