வன்கொடுமை விவகாரம் : ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
Author
bala
Date Published

சென்னை :அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறை ஞானசேகரன் என்பவரை கைது செய்தது.
அதன்பின் பெண் கொடுத்த fir லீக்கான நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனங்களும் எழுந்தது. எனவே, விவகாரம் பெரிய விஷயமாக வெடித்த நிலையில், உடனடியாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில், விசாரணையின் போது காவல் துறை அண்ணாநகா் துணை ஆணையா் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. முதற்கட்டமாக வியாழக்கிழமை மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். அதன்பிறகு அந்த சமயம் பணியில் இருந்த காவலாளிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
அதன்பிறகு அண்ணாபல்கலைகழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் எத்தனை அதில் எத்தனை வேலைசெய்கிறது என்பதையும் ஆய்வு செய்து அதன் மூலம் தகவலை சேகரித்து கொண்டார்கள். அதனை தொடர்ந்து இன்று, சென்னை கோட்டூரில் உள்ள ஞானசேகரன் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்காக ஞானசேகரன் பயன்படுத்திய லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். அதைப்போல, வன்கொடுமை நடந்த சம்பவத்தன்று ஞானசேகரன் பயன்படுத்திய தொப்பியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.