நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
Author
manikandan
Date Published

டெல்லி :இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் 26வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு திடீரென தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை மத்திய அரசு நியமித்த மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் ராகுல் காந்தி கூறுகையில், " தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் கூட்டத்தில், நான், பிரதமர் மற்றும் குழுவுக்கு ஒரு மறுப்பு கடிதத்தை சமர்ப்பித்தேன். அதில் கூறியது, நிர்வாகத் தலையீடு இல்லாத சுதந்திரமான தேர்தல் ஆணையத்தின் மிக அடிப்படையான அம்சம் தேர்தல் ஆணையர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையாகும்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்திய தலைமை நீதிபதியை கமிட்டியில் இருந்து நீக்கியதன் மூலம், நமது தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்த கோடிக்கணக்கான வாக்காளர்களின் கவலையை மோடி அரசு அதிகப்படுத்தியுள்ளது. பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் நமது தேசத்தின் ஸ்தாபக தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்துவதும், அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வதும் மக்களவை உறுப்பினராக எனது கடமையாகும். கமிட்டியின் அமைப்பும் செயல்முறையையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான நள்ளிரவில் முடிவெடுத்திருப்பது ஒழுக்கக்கேடான செயல் " என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
unknown node