Payload Logo
உலகம்

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

Author

Rohini

Date Published

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் கடுமையாகி வருகிறது, அதே நேரத்தில் ஈரானும் அமெரிக்காவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன.

ஆம்.., ஈரான் – இஸ்ரேல் போரில் இஸ்ரேலை ஆதரித்த அமெரிக்கா, கடந்த சனிக்கிழமை இரவு ஈரானின் மூன்று முக்கியமான அணு ஆயுதத் தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்கியது. அதன் பிறகு ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக பதில் தாக்குதலை அறிவித்தது.

இப்போது ஈரான் ஒரு தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளதாக தெரிகிறது. நேற்று (திங்கட்கிழமை) இரவு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி, சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை (அல்-உதெய்த் விமானத் தளம்) ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளது.

தற்போது இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஈரானின் இந்தத் தாக்குதலை இறையாண்மையின் மீதான தாக்குதல் என்று கத்தார் அரசு கூறியுள்ளது. இவ்வாறு கத்தார் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளது.

கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க ராணுவ விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு கத்தார் தனது வான்வெளியை மூடியுள்ளது. மேலும், கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாக்டர் மஜீத் பின் முகமது அல்-அன்சாரி தனது எக்ஸ் பதிவில், “ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அல்-உதெய்த் விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலை கத்தார் கடுமையாக கண்டிக்கிறது.

இந்த தாக்குதல் கத்தார் நாட்டின் இறையாண்மை, அதன் வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை கடுமையாக மீறுவதாக கூறியுள்ளார். சர்வதேச சட்டத்தின்படி ஈரான் நடத்தும் தாக்குதலுக்கு பதிலளிக்க கத்தாருக்கு உரிமை உண்டு என்று அவர் எச்சரித்தார்.

இருப்பினும், கத்தாரின் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரான் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக, ஈரானின் தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை, யாரும் காயமடையவில்லை என்று கூறினார். தாக்குதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அல்-உதெய்த் விமானத் தளம் முன்கூட்டியே முடியதாக தெரிவித்தார்.