Payload Logo
உலகம்

"மோடி நீண்ட வருட நண்பர்..,  வாழ்த்துக்கள் டிரம்ப்..," நட்பை பரிமாறிக்கொண்ட இருநாட்டு தலைவர்கள்! 

Author

manikandan

Date Published

PM Modi - Donald Trump

வாஷிங்டன் :அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்க புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி துளசி கபார்ட்டை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ந்தது.  இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

சந்திப்பு :

வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை, "நீண்ட வருட நண்பர்" எனக் கூறி கைகுலுக்கி டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்.  இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்பை பிரதமர் மோடி வாழ்த்தினார். அதன் பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

டொனால்ட் டிரம்ப் :

அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தார். மேலும், ஏற்கனவே நல்ல வர்த்தக ஒப்பந்தங்கள் இரு நாட்டுக்கும் இடையே செயல்பாட்டில் இருப்பதாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, ​​பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இந்தியா, நமது (அமெரிக்கா) எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் இறக்குமதி செய்ய போகிறார்கள் என டிரம்ப் தெரிவித்தார். மேலும் பேசிய டிரம்ப், பிரதமர் மோடி இந்தியாவில் சிறப்பாக செயலாற்றி வருகிறார், அவரும் நானும் ஒரு சிறந்த நட்பை கொண்டுள்ளோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம். என தெரிவித்தார்.

பிரதமர் மோடி :

அதனை அடுத்து பேசிய பிரதமர் மோடி,  2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் 500 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பேசினார். மேலும், இரு நாடுகளும் இணைந்து பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது என்றும்,  '2047-க்குள் வளர்ந்த இந்தியா"  என்ற நோக்கத்தை அடைவதில் கவனம் செலுத்துகிறது என்று  மோடி குறிப்பிட்டார். எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை இரு நாடுகளுக்கு இடையே வலுப்படுத்துவதற்காக இந்தியா தொடர் முயற்சி இருக்கும் என பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

மும்பை பயங்கரவாதி ராணா :

அடுத்ததாக பேசிய டிரம்ப் , 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தஹாவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக டிரம்ப் அறிவித்தார். ராணாவை நாடு கடத்துவதில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மதிப்பிடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையும் அதனை உறுதிப்படுத்தியது.