கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
Author
gowtham
Date Published

அரியலூர் :மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தில் முப்பெரும் அரசு விழாவாக ஜூலை 23 முதல் 27 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா, ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நடைபெறுகிறது.
இன்று (ஜூலை 27, 2025), விழாவின் இறுதி நாளில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் வருகை தருகிறார். அதற்காக தற்போது, திருச்சியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் விமனநிலையத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
அங்கிருந்து தனி ஹெலிகாப்பட்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைகிறார். இந்த விழாவிற்காக சோழகங்கம் ஏரியில் புதிய ஹெலிபேட் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவ வாத்தியங்கள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடி அங்கு சென்றதும் கோயிலில் வழிபாடு செய்து, இந்தியத் தொல்லியல் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். மேலும், பிரதமர் மோடி முன்னிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேடையில் திருவாசகத்தை அரங்கேற்ற உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, பொன்னேரியில் இருந்து பிரகதீஸ்வரர் கோயில் வரை பிரதமர் மோடி ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார். இவ்விழா, ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் புகழையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.