பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Author
bala
Date Published

சென்னை :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம் தேதி) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பு மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94ஆயிரம் ரேசன் அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
இந்த பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக வழங்கப்படும் பொங்கல்பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டாலும் ரூ.1,000 வழங்கப்படாதது சற்று ஏமாற்றமாக தான் மக்களுக்கு இருக்கிறது.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளாலும், அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய காரணத்தால் போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு ரொக்கம் வழங்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கு விளக்கமும் அளித்திருந்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் மக்களுக்கு ரூ.1,000 வழங்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தும் வருகிறார்கள்.