Payload Logo
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகை : "தேர்தல் வந்தால் பார்க்கலாம்..." துரைமுருகன் பேச்சால் சலசலப்பு! 

Author

manikandan

Date Published

Pongal Gift 2025 - Minister Duraimurugan speech

சென்னை :தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் இன்று அவை உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அதிமுக கேள்வி :

அப்போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பொங்கல் பரிசுத்தொகை பற்றி கேள்வி எழுப்பினார். "அதிமுக ஆட்சியில் இருந்த போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ரூ.5 ஆயிரம் கொடுக்க சொன்னார்கள். ஆனால் இப்போது பொங்கல் பரிசுத்தொகையாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை " என கூறியதாக தகவல் வெளியானது.

துரைமுருகன் பதில் :

இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "2021 சமயத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தது. அதற்காக நீங்கள் ரூ.2,500 கொடுத்தீர்கள். இப்போது தேர்தல் எதுவும் இல்லை. தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்." என துரைமுருகன் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவையில் சிறுது சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என அதிமுக மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூட கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் பதில் :

"தொடர் புயல், மீட்புப்பணிகள் என தமிழக அரசுக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவே பொங்கல் பண்டிகைக்கு ரூ.ஆயிரம் வழங்க முடியவில்லை." சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும் இதுகுறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், "2009-ல் கலைஞர் ஆட்சி காலத்தில் தான் பொங்கல் பரிசுத்தொகை கொண்டுவரப்பட்டது. 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பரிசுத்தொகை கொடுக்கவில்லை. திமுக ஆட்சியில் தான் கொரோனா காலத்தில் உதவி தொகையாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் கொடுத்தோம்" என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.