Payload Logo
தமிழ்நாடு

”மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும், என் உடல் நோய்கள் குணமாகிவிடும்” – மு.க.ஸ்டாலின்.!

Author

gowtham

Date Published

சென்னை : ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்களை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மாலை 4 வரை முகாம்கள் நடக்கும். நோய்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது.

மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பிய பிறகு நேற்று முன்தினம் தலைமை செயலகம் சென்று எனது பணிகளை தொடங்கினேன். அப்போது ஒரு வாரத்திற்கு நிகழ்ச்சிகளை எல்லாம் தள்ளிவைக்கலாமா? என அதிகாரிகள் கேட்டார்கள். அப்போது, ‘மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும். எனக்கு ஏதாவது நோய் இருந்தாலும் கூட அது குணமாகிவிடும்’ எனவே எந்த நிகழ்ச்சியையும் தள்ளிவைக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.

கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள், கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் எண்ணற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும், முகாமுக்கு வருவோரை கனிவோடும் பணிவோடும் மருத்துவ பணியாளர்கள் நடத்த வேண்டும்.

நகர்ப்புற மருத்துவ சேவை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசின் குறிக்கோள். உடல் உறுப்புகள் தானம் தருவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடல் ஆட்சியின் இருகண்கள்.

கல்விக்கும் மருத்துவத்திற்கும் ஏராளமான திட்டங்களை தொடங்கியுள்ளோம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டை நலமான மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.