''மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்'' - அமைச்சர் சிவசங்கர்.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுத்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலாக உள்ளதாக வதந்திகள் பரவின. அதாவது, தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 1) முதல் மின் கட்டணத்தை 3.16% உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தயாரித்திருப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி,1 யூனிட்டிற்கு 15 காசு முதல் 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. மேலும், இது வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, இலவச மின்சார சலுகைகள் தொடரும். மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையையும் தமிழ்நாடு மின்சாரத்துறை வெளியிடவில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடரும்'' என்று திட்டவட்டமாக அறிவித்தார்.