அடிமட்ட தொண்டனை வச்சு அண்ணாமலையை தோற்கடிப்போம்! சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு!
Author
bala
Date Published

சென்னை :தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச கோயில்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என பேசியிருந்தார். அது மட்டுமின்றி, கோயில்களுக்கு வரும் வருமானங்களை வைத்து, அந்த பகுதியில் கல்வி நிறுவனங்கள் நிறுவலாம் எனவும் பேசியிருந்தார்.
இந்த சூழலில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்ததுடன் அவருக்கு சவால் விடும் வகையிலும் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் " அண்ணாமலை போன்றவர்களுக்கு நல திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் திருக்கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் பக்கதர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கு வைத்தெரிச்சலை ஏற்படுத்துகிறது.
ஆகவே அண்ணாமலை போன்றவர்கள் ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்கள் இன்றைக்கு ஆன்மிகம் வைத்து அரசியல் செய்வதற்கு இடமில்லை என்பதால் இது போன்று தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய இயக்கத்தை பொறுத்தவரையில் அடிக்க அடிக்க உயரும் பந்து...காய்ச்ச காய்ச்ச மெருகேறுகின்ற சொக்க தங்கம் இது.
எனவே, அவர்கள் அடித்துக்கொண்டே இருக்கட்டும் எங்களுடைய இயக்கம் இன்னும் விறு விறுப்பாக செல்லும். நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம்..ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் அவர் நின்றிருக்கிறார்..எனவே அவரை வர சொல்லுங்க பாக்கலாம்..தயாராக இருக்கின்றோம். களத்திற்கு அவரை வர சொல்லுங்கள் சாதாரண திமுக அடிமட்ட தொண்டனை வைத்து நாங்கள் அண்ணாமலையை தோற்கடிப்போம்" எனவும் சவால் விடும் வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசிவிட்டு சென்றார்.
மேலும், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதில், அவர் திமுக வேட்பாளர் இரா. இளங்கோவிடம் 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.