Payload Logo
இந்தியா

கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி...காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

Author

bala

Date Published

Govindaswamy prison

கேரளா :மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர மதில் ஏறி அதிகாலை தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர், 2011-ல் சௌமியா என்ற 23 வயது பெண்ணை எர்ணாகுளம்-ஷோரனூர் பயணிகள் ரயிலில் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர். திடீரென அவர் தப்பித்து ஓடிய தகவல் தெரிந்தவுடன் ம் மாநில அளவில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

கோவிந்தசாமி, அதிகாலை 1:15 மணியளவில், சிறை மதிலில் துணிகளால் கயிறு கட்டி, மின் வேலி இருந்தபோதிலும் 25 அடி உயர மதிலை ஏறி தப்பினார். ஒரு கையை இழந்த இவர், எப்படி தப்பித்தார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. சிறை CCTV காட்சிகளின்படி, அவர் அதிகாலை 4:15 முதல் 6:30 மணிக்கு இடையில் தப்பியதாக உறுதிப்படுத்தப்பட்டது. சிறை அதிகாரிகளுக்கு இது காலை 5 மணியளவில் தெரியவந்து, கண்ணூர் காவல்துறைக்கு காலை 6:30 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடைபெற்றது.

அப்போது, தப்பியோடிய கோவிந்தசாமி, சிறையில் இருந்து 2 கி.மீ. தொலைவில், பயன்படுத்தப்படாத பழைய கட்டடம் ஒன்றின் கிணற்றில், நீர் இறைக்கும் கயிற்றில் தொங்கியபடி பதுங்கியிருந்தார் என்பது தெரியவந்தது. அங்கிருந்த உள்ளூர் மக்களின் தகவலின் அடிப்படையில், கண்ணூர் காவல்துறை, மோப்ப நாய்களின் உதவியுடன், சுமார் 9 மணி நேர தேடுதலுக்கு பிறகு காலை 10:30 மணியளவில் அவரை கைது செய்தது.

கிணற்றில் இருந்து அவரை வெளியேற்றுவது கடினமாக இருந்ததாகவும், உள்ளூர் மக்கள் கோபத்தில் அவரைத் தாக்கியதாகவும் காவல்துறை தெரிவித்தது.இந்த சம்பவம், கண்ணூர் சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. சௌமியாவின் தாயார், “இவ்வளவு உயர் பாதுகாப்பு சிறையில் இப்படி ஒரு குற்றவாளி எப்படி தப்பினார்? இதற்கு உள்ளே இருந்து உதவி இருக்க வேண்டும்,” எனக் கேள்வி எழுப்பினார். முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன், இது ஒரு “சதி” என்றும், CPI(M) தலைவர்கள் அடங்கிய சிறை குழுவின் தோல்வி என்றும் குற்றம்சாட்டினார்.

சிறை டிஜிபி பல்ராம் குமார் உபாத்யாய், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.கோவிந்தசாமி, தமிழ்நாட்டின் கரூரைச் சேர்ந்தவர், முன்னர் தமிழ்நாட்டில் 8 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். 2011-ல் சௌமியாவை ரயிலில் இருந்து தள்ளி, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததற்காக 2012-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர் உச்சநீதிமன்றம் 2016-ல் ஆயுள் தண்டனையாக மாற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node