கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்
Author
castro
Date Published

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித் (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவருடைய பெற்றோர்களையும் கைது செய்யவேண்டும் என உயிரிழந்த கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், சினிமாவை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெயிட்டுள்ள அறிக்கையில் ” சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் தற்போது சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியைப் பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தலித் வழக்குகளைக் கையாள்வதில் முந்தைய அரசு பின்பற்றிய அதே அலட்சியத்தைத் தான் இந்த அரசும் பின்பற்றுகிறது. சட்டம் ஒழுங்கு பல நிலைகளில் சீர் கேட்டு போயிருக்கும் சூழலில், இந்த ஆணவக்கொலைக்கு காரணமான சுர்ஜித்தின் பெற்றோர்கள் காவல்துறையைச் சேர்நதவர்களாக இருக்கும்போது, இந்த வழக்கு எப்படி கையாளப்படும் என்கிற சந்தேகம் வலுக்கிறது. இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் அளிக்காமல் தமிழ்நாடு அரசு மிக வெளிப்படையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன என்கிற நிதர்சனத்தை ஏற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, அரசு வேலை என்பதோடு முடித்துக்கொள்ளாமல், சாதிப் பிரச்சினைகள் அதிகம் உள்ள மாவட்டங்களைக் கூடுதல் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும்.
திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதிகளின் படி (Atrocity Prone Areas) வன்கொடுமை அதிகம் நடக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்த கணமே, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த அடிப்படை சட்ட விதிகளைக் கூட காவல்துறை பின்பற்றுவதில்லை. இதைத்தான் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி இருந்தது.
சாதியக் குற்றங்கள் ஒவ்வொரு முறை நிகழும்போதும், சம்பவம் நடந்த கணமே ஊடகத்தில் மாற்றுக் கதையாடல்களை உலவ விடும் போக்கை, காவல்துறையினர் கைவிட வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுப் பட்டியலினச் சமூக மக்களின் சமூக உரிமை மற்றும் மாண்பை மதித்து,
தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பட்டியலின மக்களோடு துணை நிற்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்புணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். பள்ளியில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் களைய நீதிபதி சந்துரு தலைமையில் அமைத்த குழுவைப் போல, ஆணவக்கொலைகளைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி, தலித் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படவேண்டும்.
ஆணவக்கொலைகளைப் போர்க்கால அடிப்படையில் அணுகி, கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், இத்தகைய குற்றங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கான எல்லா சமூக காரணிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்ட கோரிக்கையைத் புறக்கணித்து வரும் திமுக அரசையும் அதன் கூட்டணிக்கட்சிகளையும் கண்டிக்கின்றோம்” எனவும் காட்டத்துடன் கூறியுள்ளார்.