Payload Logo
இந்தியா

காஷ்மீர் சுரங்கப்பாதை : கடந்த வருடம் தீவிரவாத தாக்குதல்.. இந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைப்பு!

Author

bala

Date Published

JammuKashmir

காஷ்மீர் :ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலங்களில் சோனாமார்க் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான அணுகலை உறுதிசெய்கிறது. பனிமூட்டம் காரணமாக சாலைகள் மூடப்படும் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் திட்டம் அந்த சமயம் நிறைவேற சற்று தாமதமானது. இந்தத் திட்டம் முதன்முதலில் அக்டோபர் 2012ஆம் ஆண்டு அப்போதைய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த சி.பி. ஜோஷி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு அவசரங்களையும் சவால்களையும் கடந்து இப்போது இறுதியாக திறக்கப்பட்டுள்ளது.

ரூ.2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு அதிகம் ஏற்படும் பகுதிகளைத் தவிர்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. திறப்பு நிகழ்வில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும்,கடந்த 2024 அக்டோபர் 20 அன்று, இதே பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் APCO Infratech நிறுவனத்தின் தொழிலாளர்கள் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஒரு உள்ளூர் மருத்துவர் உட்பட மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த ஆண்டு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.