Payload Logo
தமிழ்நாடு

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

Author

bala

Date Published

Legislative Assembly Session

சென்னை :இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என பலரும் சட்டசபைக்கு வருகை தந்திருந்தார்கள். பின், சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நிமிடத்தில் உரையாற்றாமலேயே புறப்பட்டுச்சென்றார்.

சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, வரும் 11-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . நாளை (ஜனவரி 7) சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.

அடுத்ததாக ஜனவரி 8,9,10 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடர்ச்சியாக நடைபெறும். அடுத்ததாக 11-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை.

அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் நடைபெறும். ஆளுநர் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கான திருத்தங்களை உறுப்பினர்கள் 8.1.2025-ஆம் நாள், புதன்கிழமை, பிற்பகல் 3.00 மணிக்குள் இச்செயலகத்தில் கொடுக்கப்பெற வேண்டும். பேரவை வழக்கம்போல் காலை 9.30 மணிக்குக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.