மும்மொழிக் கொள்கையை திணிப்பது ஃபாசிச அணுகுமுறை! தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Author
bala
Date Published

சென்னை :தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாநிலத்திற்கு கல்வி நிதி வழங்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் சட்ட விதிகள் தடையாக உள்ளன என்றும், தமிழ்நாடு அரசின் அரசியல் காரணங்களால் தான் இந்த கொள்கையை எதிர்க்கிறது எனவும் பேசியிருந்தார்.
மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.
அந்த வகையில், அவர்களை தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும்.
நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்" எனவும் விஜய் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
unknown node