"நான் தோல்வியடைந்த அரசியல்வாதி., 20 வருடத்திற்கு முன்பு வந்திருந்தால்..," - கமல் பேச்சு!
Author
manikandan
Date Published

சென்னை :நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த 2018 பிப்ரவரி மாதம் 21இல் ஆரம்பித்தார். இக்கட்சி தொடங்கப்பட்டு தற்போது 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
அவர் பேசுகையில், நான் அரசியலில் தோற்றுவிட்டதாக பலர் கூறுகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்திருந்தால் எனது நிலை வேறு. 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியலுக்கு வராததை தான் எனது தோல்வியாக பார்க்கிறேன். நம்மை இணைப்பது தமிழ் மொழி என நாளைய வரலாறு சொல்லும். அடுத்த ஆண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒலிக்கும்.
மாணவர்கள் தான் நாளைய தமிழகம். அவர்களுக்கு என்ன இஷ்டமோ அதை தான் கற்றுக்கொடுக்க வேண்டும். நான் சொல்வதை தான் கற்றுக்கொள் வேண்டும் இல்லை என்றால் காசு தரமாட்டேன் எனக் கூறும் அரசுக்கு மக்கள், நாளைய தலைமுறை பதில் சொல்வார்கள். மாற்றத்திற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தகுதி கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறது.
தமிழ் மொழி பெருமையை யாராலும் இறக்க முடியாது. இதனை இக்காட்டான காலம் என சொல்ல மாட்டேன் . இதனை தமிழ்நாடு முன்னரே பார்த்துவிட்டது. இந்தியை திணிக்க முயன்றதை தடுத்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். மொழிக்காக உயிரை விட்டுள்ளோம். தமிழனுக்கு தெரியாதா? தனக்கு என்ன மொழி வேண்டும் வேண்டாம் என்பது, எங்களுக்கு தெரியும். "என மக்கள் நீதி மய்ய கட்சி கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.