Payload Logo
இந்தியா

"திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்" - பவன் கல்யாண்!

Author

gowtham

Date Published

Pawan Kalyan - Tirupati Temple

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இந்த சொர்க்கவாசல் தரிசனத்தில் கலந்து கொள்ள திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் பலியாகியிருக்கிற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி வைகுண்ட வாசலில் தரிசன டோக்கன் பெறுவதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்ததை அடுத்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருமலையில் உள்ள விஐபி கலாச்சாரம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் பார்ப்பதற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை, திருப்பதி கோவிலுக்கு சென்ற பவன் கல்யாண், "கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயில் நிர்வாகிகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது. கூட்டத்தை நிர்வகிப்பதில் உடனடியாக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று திருப்பதி கோவிலுக்கு பதஞ்சலி ராம்தேவ் பாபாவுடன், தெலுங்கு மாநில ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் இன்று தாராளமாக கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.

திருமலை ஸ்ரீவாரி தரிசனம் செய்ய ஏராளமான விஐபிக்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதிஅளித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும். நீங்கள் பார்க்க வேண்டியது விஐபிகள் அல்ல, பொது பக்தர்களின் தரிசனத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறித்தியுள்ளார்.