Payload Logo
கிரிக்கெட்

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

Author

gowtham

Date Published

Pakistan for Champions Trophy defeat

பாகிஸ்தான் :2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் வீரர்களை தேர்வு செய்யும் நபர்களை குறை கூறுவதற்குப் பதிலாக வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.

ஜாவேத் மியாண்டட்,  பாகிஸ்தானின் முன்னாள் மற்றும் பிரபலமான கிரிக்கெட் ஜாம்பவான் என்றே சொல்லலாம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 1996 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, 2025ம் ஆண்டு பாகிஸ்தான் முதல் முறையாக ICC போட்டியை நடத்துகிறது.

இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை நடத்தி வரும் பாகிஸ்தான், முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து மற்றும் பரம எதிரியான இந்தியாவிடம் பாகிஸ்தான் கடும் தோல்விகளைச் சந்தித்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியே தொடரில் இருந்து வெளியேறியதால், அந்நாட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தோல்வியை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட், வீரர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். "அமைப்பு, தேர்வாளர்கள் மற்றும் அனைத்தையும் குறை கூறுவது பயனல்ல" என்று ஜாவேத் மியாண்டட் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "கேள்வி என்னவென்றால், இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் எதிலும் குறைவுபட்டவர்களா? பிசிபி அவர்களை கவனித்துக் கொள்ளவில்லையா? அவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படவில்லையா? எனவே பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஆர்வம், தொழில்முறை எங்கே இருக்கிறது?" என்று அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து  பேசிய அவர், "போட்டி தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் அழுத்தத்தை உணர்ந்ததாக மியாண்டட் கூறினார். "உண்மை என்னவென்றால், போட்டி தொடங்குவதற்கு முன்பே எங்கள் வீரர்கள் அழுத்தத்தில் இருந்தனர். அவர்களின் உடல்  தகுதியை பாருங்கள், அவர்களில் ஒருவர் கூட இந்திய பந்து வீச்சாளர்களை போல் ஆதிக்கம் செலுத்தும் மனநிலையில் இல்லை," என்று அவர் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைமை மற்றும் நிர்வாகத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அணியில் 26 தேர்வாளர்கள், நான்கு வெவ்வேறு கேப்டன்கள் மற்றும் எட்டு தலைமை பயிற்சியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.