Payload Logo
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..! 

Author

manikandan

Date Published

Erode By Election 2025 - Election code of conduct

ஈரோடு :வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி ஆகியவற்றில் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் களம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்து வருகிறது.

இதற்கான தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளுக்கு முன்னர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதற்கான பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த உடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

ஈரோடு மாவட்ட ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மணீஷ் நேற்று செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அரசு மற்றும் தனியார் இடங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்களை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் எடுத்துச்செல்வோர் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் பல்வேறு தேர்தல் விதிமுறைகள் குறித்து கூறினார்.

அதனை தொடர்ந்து இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால் சுன்கரா மற்றும் மாநகர் ஆணையர் மணீஷ் , காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றியும் வேட்புமனுத்தாக்கல் பற்றியும் குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோபால் சுன்கரா கூறுகையில், "இன்று பல்வேறு அரசியல் கட்சியினரிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி அறிவுரைகள் கூறப்பட்டது. வேட்பாளர்கள் எவ்வாறு நாமினேஷன் செய்ய வேண்டும் என்பது பற்றி கூறப்பட்டது. கிரிமினல் வழக்கு முன்பு பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவர்  தொலைக்காட்சி மற்றும் செய்தி தாளில் 3 முறை அதுகுறித்து விளம்பரம் செய்ய வேண்டும். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அல்லது வேறு மக்கள் பிரதிநிதிகள் பதவியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருந்தால் அவர்கள் No Due Certificate சமர்ப்பிக்க வேண்டும்.

10ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு செய்வோர் 100 மீட்டர் இடைவெளியில் அவர்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் பிறகு 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர் உடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். " என கூறினார்.

மேலும், "கடந்த வருடம் நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 வேட்பாளர்கள் மட்டும் தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டிய கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யாததால் அவர்கள் மட்டும் இந்த தேர்தலில் போட்டியிட அனுமதிக்கபட மாட்டார்கள்" என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் கோபால் சுன்கரா கூறினார்.