அமலாக்கத்துறை சோதனைக்கும் டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! - அமைச்சர் துரைமுருகன்
Author
bala
Date Published

சென்னை :கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகள் சுமார் 44 மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது.
சோதனையின் போது, கல்லூரியின் அலுவலக ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்லூரியில் பணம் வைக்கும் அறையில், பணம் இருந்ததை கண்டறிந்து, வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, பணம் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனைகள், பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்ததன் மூலம், கதிர் ஆனந்தின் சொந்தமான கல்லூரியில் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்களைப் பற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், சோதனைக்கிடையே, கதிர் ஆனந்தின் தந்தையான அமைச்சர் துரைமுருகன் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லி சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பிய நிலையில், அவரை பார்த்த செய்தியாளர்கள் உடனடியாக அவரிடம் சோதனைக்கு இடையே நீங்கள் டெல்லிக்கு சென்ற காரணம் என்ன என கேள்விகளை எழுப்பினார்கள்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன் "என்னுடைய இலாகா சம்பந்தமான கூட்டத்திற்காக தான் நான் டெல்லி சென்றிருந்தேன். அமலாக்கத்துறை சோதனை பழகிப்போனதுதான். நீங்கள் எழுதியிருக்க கதைக்கெல்லாம் நான் ஆள் இல்லை. அமலாக்கத்துறை சோதனைக்கும், டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என பதில் அளித்தார்.