டெஸ்லாவில் வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்.!
Author
gowtham
Date Published

டெல்லி :அமெரிக்காவில் பிரதமர் மோடி, எலான் மஸ்க் இடையே சந்திப்பு நடைபெற்றிருந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது LINKEDIN பக்கத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர் மற்றும் பேக்-எண்ட் குழு என 13 வெவ்வேறு பணிகளுக்கு ஆட்களை தேடுவதாகப் பதிவிட்டுள்ளது.
டெஸ்லாவின் இந்த நடவடிக்கை இந்திய சந்தையில் அதன் நுழைவைக் குறிக்கிறது. STARLINK சேவைக்காகப் பெங்களூரில் அலுவலகம் துவங்கப்பட்ட நிலையில், டெஸ்லா செயல்பாடுகளை மும்பை மற்றும் டெல்லியில் செயல்படுத்தும் வகையில் பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டெல்லி மற்றும் மும்பை நகரில் பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா வலைத்தளத்தின்படி, மும்பைக்கான சேவை ஆலோசகர், பாகங்கள் ஆலோசகர், சேவை தொழில்நுட்ப வல்லுநர், சேவை மேலாளர், டெஸ்லா ஆலோசகர், கடை மேலாளர், வணிக செயல்பாட்டு ஆய்வாளர், வாடிக்கையாளர் ஆதரவு மேற்பார்வையாளர், வாடிக்கையாளர் ஆதரவு நிபுணர், விநியோக செயல்பாட்டு நிபுணர், ஆர்டர் செயல்பாட்டு நிபுணர், உள் விற்பனை ஆலோசகர், நுகர்வோர் ஈடுபாட்டு மேலாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
வேலை பற்றிய விரிவான தகவல்களைப் பெறவும், தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கவும், டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக, பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட பல தகவல்களை படிவத்தில் உள்ளிட வேண்டும்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், உலகம் முழுவதும் மின் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் என்ட்ரி கொடுக்க துடிக்கும் டெஸ்லா நிறுவனம், இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்கள் இந்திய வருகையை தாமதப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்திய அரசாங்கம் இப்போது $40,000 க்கும் அதிகமான விலை கொண்ட உயர் ரக கார்களுக்கான அடிப்படை சுங்க வரியை 110 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதன் காரணமாக டெஸ்லாவிற்கு இந்தியாவுக்குள் நுழைவதற்கான பாதை எளிதாகிவிட்டது.