Payload Logo
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்கள்' திறப்பு... விலை எவ்வளவு தெரியுமா?

Author

gowtham

Date Published

MudhalvarMarundhagam

சென்னை :பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.24) "முதல்வர் மருந்தகங்கள்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். சென்னையில் 33 இடங்கள் உள்பட 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' திறக்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்படவுள்ளது. இன்று காலை 10 மணி அளவில் சென்னை பாண்டி பஜாரில், முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதல்வர் மருந்தகங்கள் தமிழகத்தில் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

முன்னதாக, இந்த மருந்தகங்களுக்கு 2000க் கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூட்டுறவு துறைக்கு வந்திருந்தன. அதில் தகுதி யான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக 840 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்ததாக ஏற்கப்பட்டு உள்ளது. முதல்வர் மருந்தகத்திற்குத் தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக் கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்தகம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவரும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் எழிலன், "முதல்வர் மருந்தகம் கடைகள் திறக்கப்படுவதால், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளோ, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வழங்கப்படும் மருந்துகளோ நிறுத்தப்படாது. அவை தொடரும்.

மேலும் அவர், ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தனியார் மருந்தகங்களில் 70- ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு மாத்திரை முதல்வர் மருந்தகத்தில் 11 ரூபாய்க்கு கிடைக்குமாம். மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு தனியாரில் மருந்து வாங்க மாதம் ரூ.3,000 செலவாகும். முதல்வர் மருந்தகத்தில் ரூ.1000 மட்டுமே ஆகும் தோராயமாக 50 - 75% அளவுக்கு மருந்துகள் செலவு குறையும்.

இதன் மூலம், மாத மாதம் ரெகுலராக மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்யும் நடுத்தர மக்களின் மருந்து செலவில் இனி இந்த மருந்தகத்தில் 75 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

சென்னை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு. B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள்http://mudhalvarmarundhagam.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.