Payload Logo
தமிழ்நாடு

சிறுமிகளும், பெண்களும் அப்பா.. அப்பா.. என கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? -இபிஎஸ் ஆவேசம்

Author

bala

Date Published

mk stalin and eps

வேலூர் :அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூரில் நடைபெற்ற 'இலக்கு 2026' மாநாட்டில், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு நிர்பந்தப்படுத்தப்படுவது சரியல்ல, தமிழ்நாடு இருமொழிக் கொள்கையையே பின்பற்றும் எனத் தெரிவித்தார். அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசினார். மாநாட்டில் அவர் என்னென்ன பேசினார் என்பது பற்றி பார்ப்போம்...

மத்திய அரசுக்கு வேண்டுகோள்“தமிழ்நாட்டிற்கு நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். தேசியக் கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும் எனக்கூறுவது சரியல்ல. மும்மொழிக்கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பது சரியல்ல. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைதான் கடைபிடிக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

மத்திய அரசு உடனடியாக நிலுவைத் தொகையை ஒதுக்க வேண்டும். மாநில அரசு தன்னுடைய உரிமையை கோர வேண்டிய நேரம் இது. 100 நாள் வேலை திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். மத்தியில் உள்ள திமுக மக்களவை உறுப்பினர்கள் மத்திய அரசின் தவறுகளை காட்டி மட்டும் பேசுவது போதாது, நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, நிதி ஒதுக்கவில்லை என பேசக்கூடாது" என தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலடிஅதிமுகவின் அறிக்கை பாஜகவின் அறிக்கை போல் இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுக்கும் வகையில் பேசியதாவது " அதிமுக ஒரு மக்கள் இயக்கம். எங்களின் அடிப்படை ஆதரவு மக்கள் தான். நாங்கள் யாரை ஒட்டியும், யாரை நம்பியும் அரசியல் செய்யவில்லை. எப்போது இருந்தாலும், மக்களின் நலனுக்காகவே குரல் கொடுத்து வருகிறோம். அதிமுக, எந்த சூழ்நிலையிலும், எந்த ஒரு கட்சியின் அடிபணிந்திருக்கும் நிலை உருவாகாது.

எங்களைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்பு, திமுக தான் யாருடன் அரசியல் கூட்டணி வைத்திருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதிமுக, மக்களின் நலனுக்காக அரசியல் செய்கிறது, யாரிடமும் இணைந்து செயல்படாது" எனவும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாலியல் சம்பவங்கள்தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 56 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். சிறுமிகளும், பெண்களும் அப்பா.. அப்பா.. என கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? திமுக அரசு பொதுமக்களின் பாதுகாப்பில் தோல்வியடைந்துள்ளது. அரசு மக்களின் நலனுக்கு பதிலாக ஆடம்பர நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது" எனவும் ஆவேசமாக பேசினார்.

2026 தேர்தல்அதிமுக எந்த நேரத்திலும் கொள்கைகளை விட்டு விலகியதில்லை. நாங்கள் தெளிவான கொள்கைகளுடன் அரசியல் செய்கிறோம். ஆனால், கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கொள்கைகளை பாதிக்காத வரம்பிற்குள் தான் கூட்டணிகள் அமையும். அதிமுக எப்போதும் தமிழகத்தின் உரிமைக்காகவே போராடும் கூட்டணிக்காக யாரையும் நாடி செல்லும் நிலை எங்களுக்கு இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பலர் விரும்புகிறார்கள். எங்களை நாடிதான் மற்றவர்கள் வருவார்கள். கடந்த தேர்தல்களில் வெற்றிகரமான கூட்டணிகளை அமைத்த அதிமுக, எதிர்காலத்திலும் உறுதியான கூட்டணியுடன் 2026 தேர்தலை சந்திக்கும்" எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.