Payload Logo
தமிழ்நாடு

"தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை" -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Author

bala

Date Published

Narendra Modi

தூத்துக்குடி :பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்து, ரூ.450 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார். தூத்துக்குடி நகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில், வாகைகுளத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுடன் இணைக்கப்பட்டு, இரு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் தினமும் 9 விமான சேவைகளை வழங்குகிறது.

ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளையும், ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணிகளையும் கையாளும் திறன் கொண்ட இந்த முனையத்தில், 4 நுழைவு வாயில்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள், 21 செக்-இன் கவுன்ட்டர்கள், 2 கன்வேயர் பெல்ட்கள், 644 இருக்கைகள், மற்றும் 2 விஐபி ஒய்வு அறைகள் உள்ளன. இதற்காக 2,100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திறப்பு விழாவிற்குப் பிறகு, “வணக்கம்” என்று தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, “இன்று கார்கில் வெற்றி தினம். கார்கில் போரின் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன், வீர மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஸ்ரீ ராமரின் புனித பூமியில் காலடி எடுத்து வைத்தது பாக்கியம்,” என்றார்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ரீ டிரேட் அக்ரிமென்ட் (FTA) கையெழுத்தானதைப் பகிர்ந்து, “இது உலகின் இந்தியா மீதான நம்பிக்கையையும், இந்தியாவின் புதிய தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. இந்த FTA மூலம், பிரிட்டனில் விற்கப்படும் 99% இந்தியப் பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும், இது தமிழகத்தின் இளைஞர்கள், சிறு தொழில்கள், MSMEகள், மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு பயனளிக்கும்,” என்று கூறினார்.

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் முருகனின் ஆசியுடன், தூத்துக்குடியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதையும், வி.ஓ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற கொள்கலன் முனையத்திற்கு அடிக்கல் நாட்டியதையும் நினைவுகூர்ந்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது “இன்று, ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறேன். இதில், ரூ.2,500 கோடி செலவில் கட்டப்பட்ட தூத்துக்குடி-திருநெல்வேலி மற்றும் தஞ்சை-சேத்தியாத்தோப்பு தேசிய நெடுஞ்சாலைகள், சென்னையுடன் இணைக்கப்பட்டு, வர்த்தகத்தையும் வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும். மேக் இன் இந்தியாவின் சக்தியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் கண்டது, இந்திய ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை, 1,350 மீட்டரில் இருந்து 3,115 மீட்டராக விரிவாக்கப்பட்டு, ஏ-321 ரக ஏர்பஸ் விமானங்களை இயக்கும் திறனைப் பெற்றுள்ளது.தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலின் முக்கிய மையமாக இருப்பதாகக் கூறிய பிரதமர், “கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் ரயில்வே உள்கட்டமைப்பு புதிய உயரங்களை எட்டியுள்ளது. தமிழகத்தில் பாம்பன் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் ஒரு பொறியியல் அற்புதம். ஜம்மு & காஷ்மீரில் செனாப் பாலமும் திறக்கப்பட்டுள்ளது,” என்றார். இந்தத் திட்டங்கள், வளர்ந்த தமிழகம் மற்றும் ஆத்மநிர்பர் பாரதத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் " தமிழகத்தில் வளர்ச்சி தான் எங்களுடைய முன்னுரிமையாக உள்ளது. தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்று நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். அதற்க்கு ஒரு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தமிழ்நாட்டுக்கு கடந்த 10-ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது" எனவும் மோடி தெரிவித்தார்.