திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? - ரோஜா கேள்வி!
Author
bala
Date Published

திருப்பதி :ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன் நேற்று அதிகாலை திருப்பதியில் 7 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் கொடுக்கப்பட இருந்தது. இதனை வாங்க நேற்று முன்தினம் இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதி எம்ஜிஎம் பள்ளிக்கு அருகே உள்ள கவுண்டரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் முண்டியடித்துக்கொண்டு வரையில் முன்செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் பார்ப்பதற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்திருந்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் ரோஜா எழுப்பியிருந்த கேள்விக்கும் பவன் கல்யாண் பதில் அளித்துவிட்டு சென்றார். இந்த விவகாரம் குறித்து ரோஜா பேசுகையில் " இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என நான் வேண்டுகோள் வைத்து கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நிச்சயமாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அப்படி இல்லை என்றால், அவர் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து ராஜினாமா செய்வாரா? எனவும் கேள்வி எழுப்பி ரோஜா பேசியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பவன் கல்யாண் "இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்றபோது இங்கு இவ்வளவு போலீஸ் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? திருப்பதி கோயில் நிர்வாகம்தான் இந்த விவகாரத்திற்கு முழுமையான பொறுப்பேற்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். இருப்பினும், ரோஜா எழுப்பிய விமர்சன கேள்விக்கு தெளிவாக அவர் பதில் கூறவில்லை.