Payload Logo
விளையாட்டு

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

Author

Bala

Date Published

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து. அவரை போல ஒரு முக்கிய வீரர் இல்லை என்பது நிச்சயமாக அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த கூடிய விஷயம் தான். எனவே, அவரது நம்பர் 4 இடத்தை நிரப்புவது குறித்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. ஒரு பக்கம் ஒரு வீரருடைய பெயரையும் கூறிக்கொண்டு வருகிறார்கள்.

இந்தச் சூழலில், முன்னாள் பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம், கே.எல்.ராகுல் இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருத்து தெரிவித்துள்ளார். “விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு கே.எல்.ராகுல் ஒரு சிறந்த தேர்வு. அவரால் ஆட்டத்தை உறுதிப்படுத்துவதோடு, ஆரம்ப தோல்விகளுக்குப் பிறகு ஆட்டத்தை முன்னெடுக்கும் இரட்டைப் பங்கை ஆற்ற முடியும்,” என்று சபா கரீம் NDTV-யிடம் அளித்த பேட்டியில் கூறினார்.

2025 ஜூன் 20 முதல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. விராட் கோலியின் ஓய்வு மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வு ஆகியவை அணியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், கே.எல்.ராகுலை நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்ய வைப்பது, அணியின் பேட்டிங் வரிசையை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானது என்று கரீம் வலியுறுத்தினார்.

கே.எல்.ராகுல், இந்திய அணியில் மூத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 35.12 ஆகும், மேலும் 8 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 2,800 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். “ராகுலுக்கு இது ஒரு மாபெரும் வாய்ப்பு. அவரால் அணிக்கு உறுதித்தன்மையையும், தேவைப்படும்போது ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வழங்க முடியும்,” என்று சபா கரீம் மேலும் கூறினார்.  எனவே, இவர் கூறியதை வைத்து பார்க்கையில் இனிமேல் நம்பர் 4 இடத்தில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய அணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளார். ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வுக்குப் பிறகு, அணியில் புதிய தலைமைத்துவத்தையும், பேட்டிங் வரிசையையும் உருவாக்குவதற்கு அகர்கரின் தேர்வுகள் முக்கிய பங்கு வகிக்கும். சுப்மன் கில் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுலின் நம்பர் 4 இடம் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.