பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!
Author
bala
Date Published

சென்னை :நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் " தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என கூறியவர் பெரியார். திருக்குறளை மலம் என்று கூறியவர் பெரியார்.
வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி?அம்பேத்கர், பெரியாரை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? உலகத்தில் ஆகச்சிறந்த கல்வியாளர் என்றால் அம்பேத்கர் தான். பெரியார் யார்? தனக்கு தோணுவதை பேசிகொன்டு சென்றவர் அவர். எனவே, அம்பேத்கரையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது என்பது முட்டாள்தனம்.”என்று சீமான் கூறினார்.
இந்நிலையில், திமுக சார்பில் அக்கட்சி சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில், பெரியார் குறித்து சீமான் அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அதே போல, திராவிடர் விடுதலை கழகம் சார்பிலும் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.