"பாஜகவின் டப்பிங் வாய்ஸ் இபிஎஸ்., அதிமுக கள்ளகூட்டணி..," மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
Author
manikandan
Date Published

சென்னை :தமிழக முதலமைச்சரும் திமுக கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தொண்டர்கள், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளை தொகுத்து அதற்கு "உங்களில் ஒருவன் பதில்கள்" எனும் நிகழ்வில் பதில் அளித்து வருவது வழக்கம். அதேபோல ஒரு வீடியோ இன்று வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அந்த வீடியோ தொகுப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 'டெல்லி சட்டப்பேரவை முடிவுகள் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக்கு சம்மட்டி அடி' என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " நான் ஏற்கனவே கூறியது போல தான், எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையை பார்த்தால் அது பாஜகவின் அறிக்கையை போலவே இருக்கும். அவருடைய குரல் பாஜகவின் டப்பிங் குரலாகவே இருக்கிறது. பாஜக - அதிமுக கள்ளகூட்டணி என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் பழனிச்சாமி. இதனை பேசுவதற்கு முன் அவர் தனது தோல்விகளை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்." என பதில் அளித்தார்.
டெல்லி தேர்தலில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய பிரதான கட்சிகள் தனித்து தான் களம் கண்டன. இதில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. இதனை குறிப்பிட்டு தான் எடப்பாடி பழனிச்சாமி இந்தியா கூட்டணியை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.