Payload Logo
தமிழ்நாடு

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Author

manikandan

Date Published

Tamilnadu CM MK Stalin

சென்னை :வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கடிதம் :

அதில், " நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு வகை செய்கிறது. 1971-இல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் வரையறுக்கப்பட்டன. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து மாநிலங்களும் ஒரே அளவில் செயல்படவில்லை. தென் மாநிலங்கள் மட்டும் மக்கள் தொகையை பெருமளவில் கட்டுப்படுத்தின. இந்த முயற்சி நாட்டின் மொத்த மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவவும் செய்தது.  இப்படி பெரும் பங்காற்றிய நமது மாநிலத்தை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தண்டிக்க நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு :

தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும். இன்னொரு முறைப்படி தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், பொத்த மக்காவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக உயரும். ஆனால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டின் குரல்வளை..,

தற்போதைய மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்.

“நீட்" நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக மாநில அரசுகளின் உயர்கல்வித் துறையின் உரிமைகளை அபகரிப்பது, தேசிய அளவிலான கொள்கைகளை நமது மாநிலத்தின் மீது திணிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், இப்பிரச்சினைகளுக்கு எதிராகக் கிளர்ந்து, நமது தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆற்றலும், அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

ஒன்றாகக் கைகோர்க்க வேண்டும் :

நிலைமை இவ்வாறு இருப்பதால், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது. இந்தக் கூட்டு முயற்சிக்கு உங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். நாம் அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசித்து, நமது மாநிலத்தின் நலன் காப்பதற்கான ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், தகுந்த உத்திகளைத் தீட்டிச் செயல்படுத்திட தங்களுக்கு இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறேன். இது தொடர்பாக, மார்ச் 5 அன்று, காலை 10 மணியாவில் தலைமைச் செயலகம், நாமக்கல் களிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில், நாம் அனைவரும் கலந்தாலோசிக்கலாம் என கருதுகிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

unknown node