Payload Logo
தமிழ்நாடு

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை...அன்பில் மகேஷ் உடனடியாக பதவி விலகனும்! அண்ணாமலை ஆவேசம்!

Author

bala

Date Published

anbil mahesh poyyamozhi annamalai

சென்னை :தமிழகத்தில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமீபகாலமாக தொடர்ச்சியாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், பள்ளி உதவித் தலைமையாசிரியர் மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில்பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு புகார் தெரிவித்த நிலையில், உடனடியாக விசாரணை மேற்கொண்டார்கள். விசாரணையில் மாணவிகள் தங்களுடைய புகார்களை தனி தனியாக தெரிவித்த நிலையில், மகளிர் போலீஸ் நிலையம் புகாரின் அடிப்படையில் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக பதவி விலகவேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில் " புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.

உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, திரு. அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனவும் அண்ணாமலை ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

unknown node